மேட்டூர் அணையில் குறைந்து வரும் நீர் மட்டம்

மேட்டூர் அணையில் குறைந்து வரும் நீர் மட்டம் காரணமாக பருவ மழை பெய்து குறுவை சாகுபடி தப்பிக்குமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.;

Update:2023-07-04 02:30 IST

திருக்காட்டுப்பள்ளி;

மேட்டூர் அணையில் குறைந்து வரும் நீர் மட்டம் காரணமாக பருவ மழை பெய்து குறுவை சாகுபடி தப்பிக்குமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட்டூர் அணை

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்து கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை, கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 22 நாட்களும் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 17 நாட்களும் ஆகிவிட்ட நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என விவசாயிகள் ெதரிவித்துள்ளனா்.

3½ லட்சம் ஏக்கர்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் வெப்பம் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் அதிலும் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குரல் எழுப்புகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த ஆண்டு 3½ லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை மிஞ்சி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேளாண்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

கடுமையான வெப்பம்

மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.25 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்மட்டம் 87.65 அடியாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 அடி தண்ணீர் குறைந்துள்ளது. இன்னமும் பருவ மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் காவிரி பாசன பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக குறுவை சாகுபடி மேற்கொள்ள அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.

விவசாயிகள் கவலை

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அதன் மூலம் அங்குள்ள அணைகளில் தண்ணீர் நிரப்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.ஆழ்துளை கிணறுகளைக் கொண்டு முன் பட்ட குறுவை சாகுபடி ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், கால்வாய் பாசன விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. பருவ மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து குறுவை சாகுபடியை மெய்ப்பிக்க வாய்ப்பு இருக்குமா? பொய்த்து போகுமா? என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

120 அடி

கால்வாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் நாற்றங்காலில் விதை விதைத்துவிட்டு மேட்டூர் அணை நீர் இருப்பு நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விதைத்ததை நடவு செய்த பின்னர் போதுமான தண்ணீர் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை ஒருபுறம் இருந்தாலும், குறுவைக்கு காப்பீடு இல்லாத நிலை விவசாயிகளை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.95 அடியாக இருந்தது.கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வந்த போது ஜூலை 11-ந் தேதியில் இருந்து நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து 17-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின்னர் மேட்டூர் அணை மூடப்படும் வரை நீர் மட்டம் 120 அடியாகவே இருந்தது.

கர்நாடக அரசு

இந்தஆண்டும் கடந்த ஆண்டைப்போல இயற்கை கருணை அளித்து மேட்டூர் அணை நிரம்பும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.மேலும் காவிரி ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்