மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு அதிகரிப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

Update: 2023-07-07 20:02 GMT

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 12-ந் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து சில வாரங்கள் அதே நிலையில்தான் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன்பிறகு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

இந்த நிலையில் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் தேவை கூடுதலாக தேவைப்படுவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 84.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 226 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்