கழிவுபஞ்சு விலை மீண்டும் உயர்வு

ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தும் கழிவுபஞ்சு விலை மீண்டும் உயர்ந்து கிலோவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகிறது. இதனால் ஓபன் எண்ட் மில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-08-20 16:49 GMT


ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தும் கழிவுபஞ்சு விலை மீண்டும் உயர்ந்து கிலோவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகிறது. இதனால் ஓபன் எண்ட் மில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஓபன் எண்ட் மில்கள்

பருத்தியில் இருந்து கிடைக்கும் பஞ்சு விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. இதனால் பஞ்சுவை வாங்கி அதில் இருந்து நூல்களை தயாரித்து வரும் நூற்பாலைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. நூற்பாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை ஓபன் எண்ட் மில்கள் வாங்கி அதில் இருந்து நூல் தயாரித்து காடாதுணி, டவல், மிதியடி, லுங்கி உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பஞ்சு விலை அதிகரித்து வருவதால், கழிவுபஞ்சு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் ஓபன் எண்ட் மில்களை நடத்தி வருபவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஓபன் எண்ட் மில்கள் சங்க (ஒஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது:-

பஞ்சு விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் இருந்தாலும், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட மில்கள் உள்ளன. நூற்பாலைகளில் பஞ்சுவில் இருந்து நூல் தயாரிக்கும்போது 20 சதவீத பஞ்சு கழிவு ஏற்படும். கோம்பர் பஞ்சு என்று அழைக்கப்படும் கழிவு பஞ்சைதான் நாங்கள் வாங்கி அதில் இருந்து நூல் உற்பத்தி செய்து வருகிறோம்.

முன்பு மாதத்துக்கு ஒருமுறை கழிவுபஞ்சு விலை உயர்த்தப்படும். ஆனால் தற்போது வாரத்துக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் பஞ்சு விலை உயர்த்தபோது கழிவு பஞ்சுவின் விலையும் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் அதன் பஞ்சு விலை குறைந்ததால் கழிவுபஞ்சு விலையும் குறைக்கப்பட்டது.

கிலோ ரூ.140-க்கு விற்பனை

ஆனால் தற்போது மீண்டும் கழிவுபஞ்சு உயர்த்தப்பட்டு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பல ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ.105-க்கு விற்ற கழிவு பஞ்சு வாரந்தோறும் உயர்த்தப்படுவதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மில்களை நடத்தி வருபவர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகிறார்கள்.

கழிவுபஞ்சு விலை உயர்ந்து வருவதால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நூல்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதைதடுக்க வெளிநாடுகளில் இருந்து கழிவுபஞ்சை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். இது ஒருபுறம் இருக்க நமது நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் கழிவுபஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்றுமதிக்கு தடை

தற்போது நமது நாட்டில் கழிவுபஞ்சு விலை உயர்ந்து வருவதால், தற்காலிகமாக இந்த பஞ்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருகிலோ கழிவுபஞ்சு ரூ.100-க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த ஒருகிலோ பஞ்சுவில் இருந்து ரூ.800 மதிப்பிலான மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து அந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் நமது நாட்டுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கும். எனவே கழிவுபஞ்சு விலை குறையும் வரை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு கழிவுபஞ்சு ஏற்றுமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும். இதற்கு மேல் கழிவு பஞ்சு விலை உயர்ந்தால் ஒபன் எண்ட் மில்களில் உற்பத்தி நிறுத்தம் செய்வது பற்றி முடிவு செய்யப்படும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்