கோரையாறு தலைப்பு அணை திறப்பு

நீடாமங்கலம் அருகே குறுவை பாசனத்துக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-19 19:00 GMT

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே குறுவை பாசனத்துக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு உள்ளது.

குறுவை சாகுபடி

குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த 12-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை நீரானது கல்லணையை 16-ந் தேதி அதிகாலை வந்தடைந்தது. அன்றையதினம் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறந்து வைக்கப்பட்டது. கல்லணையிலிருந்து பாசன நீரானது பெரியவெண்ணாற்றின் மூலம் நீடாமங்கலம் அருகேயுள்ள கோரையாறு தலைப்பை (மூணாறுதலைப்பு) நேற்று மாலை வந்தடைந்தது.

திறந்து வைத்தனர்

பெரியவெண்ணாற்றில் கோரையாறு தலைப்பு அணையை 820 கன அடி நீர் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக பாசனத்துக்குகோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு வெண்ணாற்றில் 285 கன அடி நீரும், கோரையாற்றில் 409 கனஅடி நீரும், பாமணிஆற்றிலிருந்து 125 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அறிவுரையின் பேரில் பணியாளர்கள் கோரையாறு தலைப்பு அணையை திறந்து வைத்தனர்.

பாசன வசதி

வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கர் விளை நிலங்களும், கோரையாற்றின் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர் விளை நிலங்களும், பாமணி ஆற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறும். இதன்மூலம் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் நீர் திறந்து விடப்பட்டு கடைமடைப்பகுதிகளுக்கு நீரானது விரைவில் சென்றடையும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்