மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியாற்றிய போர்க்கப்பலுக்கு பணி ஓய்வு; குஜராத்தில் நினைவுச்சின்னமாக வைக்கப்படுகிறது
மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியிலிருந்த போர்க்கப்பல் கடந்த மாதம் 30-ந்தேதியோடு தன்னுடைய சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சென்னை:
இந்திய கடலோர காவல் படையில் 'ஹோவர்கிராப்ட்' (எச்-181) என்ற நவீன ரக போர்க்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 'ஏர் குஷன்' என்ற வகை போர்க்கப்பல் இந்திய கடலோர காவல்படை மற்றும் நாட்டின் முதல் கப்பலாகும்.
இது கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி மும்பையில் பணியில் சேர்க்கப்பட்டது. கடற்கரையில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் பகுதி மற்றும் ஆழமான பகுதியிலும் செல்லும் வகையிலான போர்க்கப்பலாகும்.
ராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த போர்க்கப்பல், வங்க கடலில் உள்ள பாக் நீரினை மற்றும் மன்னார் வளைகுடாவின் பரந்த பகுதியில் கடல்சார் நடவடிக்கைளில் நாட்டுக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பல்வேறு கடல்சார் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தேடுதல் மற்றும் மீட்பு, கடத்தல் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு உதவி செய்தல், மருத்துவ உதவி மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திறம்பட செயல்பட்டது.
கடந்த மாதம் 30-ந்தேதியோடு தன்னுடைய 22 ஆண்டு கால புகழ் பெற்ற சேவையை வெற்றிகரமாக போர்க்கப்பல் நிறைவு செய்துள்ளது. தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, குஜராத்தில் உள்ள லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய மையத்தில் போர் நினைவுச்சின்னமாக வைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.