மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து விவசாயி பரிதாப சாவு

சங்கரன்கோவில் அருகே மழையின்போது மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-31 18:45 GMT

பனவடலிசத்திரம்:

சங்கரன்கோவில் அருகே மழையின்போது மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். 

லேசான மழை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று முன்தினம் மாலை லேசான மழை பெய்தது. அப்போது பலத்த இடி, மின்னல் இருந்தது. மின்னல் தாக்கி சுவர் இடிந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, மேலநீலிதநல்லூர் ஒன்றியம் மருதங்கிணறு ஊராட்சிக்கு உட்பட்டது ஆவுடையார்புரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (65).

இவர்கள் விவசாய பணிகளுடன் ஆடு, மாடுகளையும் பராமரித்து வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலி

நேற்று முன்தினம் மாலை மழை பெய்தபோது தங்களுக்கு சொந்தமான ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் உள்ள தொழுவத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. அதில் ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட சுவர் இடிந்து தங்கவேல் மற்றும் வள்ளியம்மாள் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வள்ளியம்மாள் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்