திண்டுக்கல்லில் நெரிசல்-விபத்தை தவிர்க்க நடை மேம்பாலங்கள் அவசியம்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல்லில் ஆபத்தான முறையில் மக்கள் சாலையை கடப்பதை தவிர்க்கும் வகையில் நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-07 20:00 GMT

தமிழகத்தில் ஒவ்வொரு நகருக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஆனால் வணிகம், கல்வி, தொழில் என பல துறைகளில் தடம்பதிக்கும் நகரம் என்றால் அது திண்டுக்கல் தான். இதனால் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக திண்டுக்கல் திகழ்கிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், வார மற்றும் தினசரி சந்தை என அனைத்தும் இருக்கின்றன. இதனால் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வருகின்றனர்.

அதேபோல் திண்டுக்கல்லில் இருக்கும் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதற்கும் பல கிராம மக்கள் வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்டுமான தொழிலாளர்கள் பலதரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் வளமாக்கும் நகரமாக திண்டுக்கல் இருக்கிறது.

மக்கள் நெருக்கம்

திண்டுக்கல் நகரில் ஏற்கனவே 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதற்கிடையே வணிகம், கல்வி, வேலை, தொழில் ரீதியாக ஆயிரக்கணக்கானோர் தினமும் திண்டுக்கல் நகருக்குள் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நெருக்கம் மிகுந்த நகராகவும் திண்டுக்கல் உள்ளது.

மேலும் கார், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாகனங்கள் நகரில் வலம் வருகின்றன. மக்கள் நெருக்கம், வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதி இல்லை என்பது பெரும் குறையாக இருக்கிறது. அதேபோல் பல சாலைகளை அகலப்படுத்தவும் முடியவில்லை.

பரபரப்பான சாலை

இதனால் திண்டுக்கல் நகரில் பெரும்பாலான சாலைகள் பரபரப்பான வாகன போக்குவரத்தோடு, நெரிசல் மிகுந்ததாக காணப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் நாகல்நகர், பழனி சாலை, திருச்சி சாலை, மெயின்ரோடு, மதுரை சாலை ஆகியவை வாகன நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் ஆகும்.

இந்த சாலைகளில் பரபரப்பாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே மக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்வதை தினமும் பார்க்க முடிகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் சாலையை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர்.

ஆபத்தாக கடக்கும் மக்கள்

இதில் திண்டுக்கல் நாகல்நகரில் மேம்பாலத்தின் அருகில் தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், ஏராளமான பள்ளி மாணவிகள் சாலையை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். மேம்பாலத்தில் இருந்து அசுர வேகத்தில் வரும் வாகனங்களுக்கு நடுவே சாலையை கடப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

அதேபோல் மதுரை சாலையில் பேகம்பூர், சவேரியார்பாளையம் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர். இதுதவிர பழனி சாலையில் வாணிவிலாஸ் சிக்னல் பகுதி, திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி, உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையை கடக்க மக்கள் படாதபாடுபடுகின்றனர்.

நடை மேம்பாலங்கள் அவசியம்

இதில் திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலையின் நடுவே சிமெண்டு தடுப்புகள் உள்ளன. அதற்கு நடுவே இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து மக்கள் சாலையை கடக்கின்றனர். இதனால் சிலநேரம் விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது.

இவ்வாறு ஆபத்தான முறையில் சாகசம் செய்து சாலையை கடப்பதை தவிர்க்க, நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு நடை மேம்பாலம் அமைத்தால் மக்கள் சிரமமின்றி பாதுகாப்பாக சாலையை கடந்து செல்வார்கள்.

இதன்மூலம் சாலை போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துகளும் குறையும். எனவே நகரில் முக்கிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்