நெரிசலில் சிக்கி தவிக்கும் விருத்தாசலம் பஸ் நிலையம்

விருத்தாசலம் பஸ் நிலையம் நெரிசலில் சிக்கி தவிக்கின்றது.;

Update:2023-02-23 00:15 IST

கடலூர் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று விருத்தாசலம்.

இங்கு மாவட்டத்திலேயே மிகப்பெரிய ரெயில் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், ஒன்றியஅலுவலகம், நகராட்சி அலுவலகம், புகழ்பெற்ற கோவில்கள், அரசு கலைக்கல்லூரி, செராமிக் தொழிற்பேட்டை, செராமிக் தொழிற்கல்லூரி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

நிரம்பி வழியும் கூட்டம்

அதாவது மாவட்ட தலைநகருக்கு நிகராக அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமைய பெற்றுள்ளது விருத்தாசலம் நகராட்சி. மேலும் சென்னை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கும்பகோணம், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன.

இதனால் விருத்தாசலத்தை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக விருத்தாசலம் நகருக்கு தான் வந்து செல்கின்றனர். இதனால் விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எந்நேரமும் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் பஸ் நிலையத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.

குறுகிய இடத்தில் பஸ் நிலையம்

ஆம், கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக விருத்தாசலம் பகுதி மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். காரணம், ஒரு மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும், அரசு அலுவலகங்களும் விருத்தாசலத்தில் அமைந்துள்ளன. ஆனால் பஸ் நிலையம் மட்டும் தான் போதிய இடவசதி இன்றி குறுகிய இடத்தில் அமைந்துள்ளது.

அந்த குறுகலான இடத்தையும், பஸ் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு கார், மோட்டார் சைக்கிளில் வரும் பொதுமக்கள் ஆக்கிரமித்து விடுவதால், பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை.

நடவடிக்கை இல்லை

அதாவது பஸ் நிலையம் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துகின்ற பார்க்கிங்காக மாறி வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பல வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் சாலைகளிலேயே அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக ஜங்ஷன் ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

சுகாதார சீர்கேடு

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் விருத்தாசலம் பஸ் நிலையம் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இலவச கழிவறைகள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி மூலம் இயங்கும் கட்டண கழிவறையும் சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக மாறியுள்ளது.

இந்த கழிவறையின் செப்டிக் டேங்க்கில் இருந்து கழிவுநீர் வெளியேறி பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் பஸ் நிலையத்திற்கு வருவதற்கே தயங்குகின்றனர்.

திறப்பு விழா

மேலும் புறநகர் காவல் நிலையம் எதிரே செப்டிக் டேங்க் சேதமடைந்துள்ளதால், அதில் பயணிகள் யாரும் தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் அவ்வழியாக பயணிகள் நடந்து செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே அந்த கழிப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, நவீன முறையில் புதிய கழிப்பறை கட்ட வேண்டும். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் கழிவறையையும் உடனடியாக திறக்க வேண்டும்.

நடைபாதையில் தங்கும் மக்கள்

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் விடுதி பல ஆண்டுகளாக பயணிகளுக்காக பயன்படுத்தப்படாமல், தனியார் உணவு விடுதி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் இரவில் தங்க இடமின்றி பஸ்நிலைய நடைபாதையிலேயே தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு தங்குபவர்களையும் போலீசார் அடித்து துரத்தி விடுகின்றனர். அதனால் அந்த அரசு பயணிகள் விடுதியை மீட்டு வெளியூர் பயணிகள் தங்குவதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையே விருத்தாசலம் பஸ் நிலையம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்த விவரம் வருமாறு:-

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

வக்கீல் மணிகண்டன்:- விருத்தாசலத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகிப்பது கிடையாது. இதனால் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நம்ம டாய்லெட் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கான தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகளை செய்து தராததால் அந்த டாய்லெட்டை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. இந்த டாய்லெட் திட்டத்தால் கோடிக்கணக்கான அரசு பணம் விரயமாகியுள்ளது. பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள காலியிடங்களை பயணிகள் சிறுநீர் கழிக்க பயன்படுத்திக்கொள்வதால் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் முகத்தில் துணி கட்டிக்கொள்கின்றனர். மேலும் கழிவுநீரால் சூழப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கினால், கழிவுநீரில் கால் வைத்து தான் நடக்கவேண்டியுள்ளது. எனவே செயல்படாத கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதுடன், பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

வயலூர் இளங்கோவன்:- விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பால், பயணிகள் அமர கூட இடவசதியில்லை. இங்குள்ள கடைக்காரர்கள் நடைபாதையையும் ஆக்கிரமித்து பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். மேலும் தரைவிரிப்பு கடைகளும் நடைபாதையிலே உள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பஸ் நிலையத்தில் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து சென்று பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதனால் நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

புறநகர் பஸ் நிலையம்

பெரியகண்டியாங்குப்பம் வடிவேல்:- விருத்தாசலம் நகரம் அரியலூர், பெரம்பலூரை விட மிகப்பெரிய நகரம். அந்த நகரங்கள் எல்லாம் மாவட்டமாகி எங்கேயோ சென்று விட்டது. ஆனால் விருத்தாசலம் இன்று வரை வளர்ந்து வரும் நகரமாகவே உள்ளது. அதனால் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையம் மிகச்சிறியதாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் இந்த பஸ் நிலையத்தை கிராமங்களுக்கு செல்லும் நகர பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். அதேபோல திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், பெங்களூரு, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பஸ்களை நிறுத்த புறநகர் பஸ் நிலையம் என்று தனியாக அமைத்திட வேண்டும். அவ்வாறு அமைத்தால் விருத்தாசலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும். மேலும் இந்த நகரம் வளர்ந்த நகரமாக மாறுவதற்கு அடித்தளமாகவும் அமையும். அரசு இதனை செய்யுமா? என்றுதான் தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்