விருதுநகர் நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகராட்சி கூட்டம்
விருதுநகர் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் தனலட்சுமி துளசிராம், கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் முத்துராமன் பேசும்போது, நகரின் முக்கிய சாலையான ெரயில்வே பீடர் ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும். தெரு மின்விளக்குகள் தரமாக இல்லை. தனியார் தொலைதொடர்பு நிறுவனம் நகர் முழுவதும் மின்கம்பங்களுக்கு அருகில் தங்களது தொலை தொடர்பு சேவைக்கான கம்பங்களை நட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.
கமிஷனர் வீனா சைமன் பதில் அளிக்கும்போது, மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதியுடன் பேசி முடிவெடுக்கும் வரை அவர்களின் பணியை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
வெளிநடப்பு
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜ்குமார், பால்பாண்டி ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார் கூறியதுடன் அதனை கண்டித்து வெளிநடப்புச் செய்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேபி மற்றும் சித்தேஸ்வரி ஆகியோர் வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஜெயக்குமார், அ.ம.மு.க. கவுன்சிலர் ராமச்சந்திரன், சுயேச்சை கவுன்சிலர் முத்துலட்சுமி ஆகியோரும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும் , ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனியை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை என தி.மு.க. கவுன்சிலர் கலையரசன் வேதனை தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் அவர்கள் எங்களைத்தான் கேள்வி கேட்கிறார்கள் என தி.மு.க. கவுன்சிலர் மதியழகன் வருத்தம் தெரிவித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.