விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம்

விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-02-04 18:45 GMT

முருகன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருக பெருமான் சமேத வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அறியாமையால் சிவ நிந்தனை புரிந்து மயங்கிய நாரதருக்கு, விராலிமலை முருகவேல் உபதேசம் செய்து முக்தி அளித்தார். இதனால் இங்கு நாரதருக்கு உற்சவசிலை உள்ளது. மேலும் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சிதந்து அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாடவைத்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

வெள்ளி குதிரை வாகனத்தில்...

அதேபோல் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழாவானது கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை-மாலை ஆகிய இருவேளைகளிலும் வெள்ளி மயில், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை சுப்ரமணியசுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் சென்று விராலூரில் உள்ள தனது மாமனான சீனிவாச பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அங்கு மண்டகப்படி முடித்து நேற்று அதிகாலை விராலிமலை வந்தடைந்தார்.

தேரோட்டம்

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் காலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் சிறிய தேரிலும், முருகபெருமான் வள்ளி-தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினர். இதனைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் மதியம் 1.15 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.

அன்னதானம்

தேரோட்டத்தின் போது, 4 ரத வீதிகளிலும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்- வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று தெப்ப உற்சவம்

திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பஉற்சவம் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) விடையாற்றியுடன் தைப்பூச விழாவானது நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்