இன்று விநாயகர் சதுர்த்தி விழா: கடலூரில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூரில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீடுகளில் வைத்து பூஜை செய்யக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று கடலூர் மாநகர வீதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இந்த சிலைகள் ரூ.100, ரூ.150, ரூ.200 என விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
பழ வகைகள்
கடலூர் உழவர் சந்தையில் நேற்று பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்தனர். விநாயகருக்கு படையல் செய்வதற்கு தேவையான வாழை பழம், இலை, தேங்காய், எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, பூசணிக்காய் மற்றும் பழவகைகளை வாங்கிச்சென்றனர்.
இது தவிர உழவர் சந்தைக்கு வெளியே சிறு வியாபாரிகள் கடை வைத்து ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, பேரிக்காய், விளாங்காய் போன்ற பழவகைகளை விற்பனை செய்தனர். வசதி படைத்தவர்கள் கிலோ கணக்கில் பழவகைகளை வாங்கிச்சென்றனர். ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாங்கும் வசதிக்கு ஏற்ப தலா ஒரு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, விளாங்காய், கம்பு, சோளம் என பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு செட் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
அவல், பொரி
இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். தனியாக ஒரு கிலோ பேரிக்காய் ரூ.100-க்கும், விளாங்காய் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அவல், பொரி, கடலை அடங்கிய பை ரூ.10, ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் அலங்கார குடைகள் ரூ.30, ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் எங்குப்பார்த்தாலும் அலங்கார குடைகள் விற்பனை நடைபெற்றதை பார்க்க முடிந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ஆகிய பகுதிகளிலும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.