தலையில் கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு
தலையில் கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா மேல்தாழனூர் சின்னசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி அஞ்சலை (வயது 50). இவருடைய மகன் பரசுராமனும் (32) அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சரத்குமார் (24) என்பவரும் ஒன்றாக சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். பின்னர் சில மாதங்களிலேயே பரசுராமன், சென்ட்ரிங் வேலைக்கு பயன்படும் சீட்டு மற்றும் பலகைகள் ஆகியவற்றை சொந்தமாக வாங்கி வைத்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலையில் போதிய லாபம் கிடைக்காததால் அவர், அந்த பொருட்கள் அனைத்தையும் சரத்குமாரிடம் ஒப்படைத்து விட்டு, இதன் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை தனது பெற்றோரிடம் கொடுக்குமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
ஆனால் சரத்குமார், அந்த வேலையின் மூலம் கிடைக்கும் பணத்தை பரசுராமனின் பெற்றோருக்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் பரசுராமனின் தாய் அஞ்சலை, அவ்வப்போது சரத்குமாரிடம் சென்று வாடகை பணத்தை தரும்படி கேட்டு வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 9.12.2017 அன்று மாலை அஞ்சலையிடம் சென்று வாடகை பணத்தை தருவதாக கூறி அவரை சரத்குமார் அழைத்துச்சென்றார். எரவலம் பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் வைத்து அஞ்சலையை கல்லால் தாக்கியதோடு அவரது தலையிலும் தூக்கிப்போட்டார். இதில் பலத்த காயமடைந்த அஞ்சலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து சிங்காரவேல், திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரத்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட சரத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.