கஞ்சா விற்பனை இல்லாத கிராமங்கள் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,562 கிராமங்களில் 250 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 190 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு புதுமைக்காலனியில் கடந்த ஆண்டு வரை அதிகமான கஞ்சா விற்பனை நடந்து வந்தது. அங்கு கஞ்சா விற்பனை இல்லாத சூழ்நிலையை போலீசார் நடவடிக்கை எடுத்து மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று முன்தினம் புதுமைக்காலனியில் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு நடத்தினார்.