அடிப்படை வசதிக்காக ஏங்கும் கிராம மக்கள்அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சங்கராபுரம் அருகே அடிப்படை வசதிக்காக கிராம மக்கள் ஏங்கி தவித்து வருகிறார்கள்.;

Update:2023-04-09 00:15 IST


மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வடபொன்பரப்பி ஊராட்சி. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை.

குறிப்பாக பல இ்டங்களில் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. சில இடங்களில் கால்வாய் இருந்தும் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் கொசு உற்பத்திக்கு வழிவகுப்பதுடன், அதனால் நோய் தொற்று பரவும் நிலையும் உருவாகி உள்ளது. அதேபோல், இங்குள்ள நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாகவே இருக்கிறது.

சேதமடைந்த குடிநீர் தொட்டிகள்

பல்வேறு தெருக்களில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளாத காரணத்தினால், அனைத்து குடிநீர் தொட்டிகளும் சேதமாகி இருக்கிறது. ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார்கள் இல்லாததால் தண்ணீர் ஏற்ற முடியாமலும் இருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சாலை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கும் வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் குடிநீர் குழாயில் சிலர் மாடுகளை கட்டி வருகின்றனர். இதனால் குழாய் சேதமடைந்து, வருகிறது.

10-க்கும் மேற்பட்ட கைப்பம்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகம் அருகே கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 8 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் முழுவதும் முடிந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதை சமூக விரோதிகள் தங்களின் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.

தரம்பிரிக்காமல் எரிக்கப்படும் குப்பை

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது மிகவும் வேதனையாக உள்ளது.

பிரம்மகுண்டம் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருவதை அதிகாரிகள் இதுவரை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்படாமல் எரிக்கப்படுகிறது.

பழுதான மின்விளக்குகள்

மேலும் கிராமத்தில் பல பகுதிகளில் தெரு மின்விளக்குகளே இல்லை. சில இடங்களில் இருந்தும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அதிக அளிவில் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி செல்லும் சாலையின் ஓரத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சாலையோரத்தில் மண் கொட்டி சமப்படுத்த வேண்டும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்