ஊராட்சி மன்ற தலைவருக்குகொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மூக்கனூர் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை
ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூக்கனூர் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவராக செல்வகுமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் மீது சிலர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருவதோடு, சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். எனவே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.