தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் கந்தசாமி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், தனிநபர் கடன், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டன.
கிராம மக்கள் போராட்டம்
சிவகிரி தாலுகா ராமநாதபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமுதாய தலைவர்களான ஜெயராஜ், பழனிச்சாமி, கண்ணன், பெரியநாயகம் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அலுவலகத்தின் முன்பு அவர்கள் தங்களது கைகளில் ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் இந்த அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக கோஷமிட்டனர்.
பின்னர் போலீசார் அவர்களில் சிலரை மட்டும் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுக்குமாறு கூறினர். இதனைத்தொடர்ந்து சமுதாயத் தலைவர்கள் மட்டும் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதாக கூறினார்கள். அப்போது அதிகாரிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோரிக்கை மனு
தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்திலும், அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனி நபர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், அந்த இடத்தை பஞ்சாயத்து கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் விதிமுறைகளை மீறி சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா பெற்றுள்ளார். அந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் நடக்கும் பாதையை மறித்து முள்வேலி அமைத்து அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பெண்களை கிண்டல், கேலி செய்தும், இரவு நேரங்களில் மது அருந்தி ஊருக்குள் வருவோர் போவோரை தகாத வார்த்தைகளால் பேசியும் வருகிறார்கள். இதனால் நாங்கள் கிராமத்தில் வாழ வழி இல்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே ஊரை காலி செய்து விட்டு ஆதார் அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்துள்ளோம். புறம்போக்கு நிலத்திற்கு விதிகளை மீறி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரி சமரசம்
இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் அந்த கிராமத்திற்கு அதிகாரிகளுடன் நேரடியாக வந்து புறம்போக்கு இடம் என்றால் அந்த பட்டா ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதன்பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.