ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
இலவச பட்டாவுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிப்பு செய்வதாக கூறி ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஓமலூர்:
கிராம மக்கள்
ஓமலூர் அருகே சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதும், அப்போது விரைவில் இடம் தருவதாகவும் அதிகாரிகள் கூறுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மதியம் 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை என்று வேதனை தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தியவர்களிடம், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தாசில்தார் நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
எனவே போராட்டத்தை கைவிடும்படி கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.