அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராமமக்கள்

பொரசப்பட்டில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2023-02-27 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது பொரசப்பட்டு கிராமம். இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளிகள். அதனால்தானோ என்னவோ இவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக தாகம் தணிப்பதற்கு குடிநீர் கூட இல்லாத அவல நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தெருக்களில் குழாய்கள் அமைக்கப்பட்டன. அனால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். தெருக்களில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து காட்சி பொருளாகவே உள்ளது. இதையடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இங்குள்ள கிழக்கு தெருவில் உள்ள மின்கம்பம் அருகில் அடி பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் உஷ்.., உஷ்...என்று வெறும் காற்றுதான் வருகிறதே தவிர தண்ணீர் வருவதில்லை. அதை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் காலி குடங்களை தூக்கிக்கொண்டு குடிநீரை தேடி அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும், விவசாய கிணறுகளை தேடியும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் குளம்போல் தேங்கி நிற்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால் போன்ற கொடிய நோய்களும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில தெருக்களில் போதிய சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களிலேயே தேங்கி நிற்பதால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இது பார்க்கும் நபர்களை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.

மேலும் இங்குள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதனால் இங்குள்ள சமுதாய கூடத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சமுதாய கூடத்தை சுற்றிலும் பாறைகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்போன்று காணப்படுவதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதால் அங்கன்வாடிமைய ஊழியர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அச்சப்படுகின்றனர். போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பயந்து சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர்.

மேலும் இங்கு இரவு நேரங்களில்போடப்படும் மின் விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் மின்சாரம் வீணாக விரயமாவதோடு, மின்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் கிராமத்தின் சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆத்திர அவசரத்துக்கு வெளியே வந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, ஒரு கிராமத்துக்கு குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசிய தேவை. இந்த வசதி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இருக்கிற 10-க்கும் மேற்பட்ட மினி குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாததால் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் வெகுதூரம் கால்கடுக்க நடந்து சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. கழிவுநீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு உள்ளது. வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 24 மணி நேரம் எரியும் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து வெளிச்சத்தை கொடுத்து சீக்கிரமே பியூஸ் ஆகி விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருடர்களுக்கு பயந்து வெளியே வந்து செல்ல அச்சமாக இருக்கிறது. அங்கன்வாடி மையம் கட்ட இடம் தேர்வு செய்தும் இன்னமும் பணி தொடங்கவில்லை. இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருவதால் அங்கு ஏழை, எளிய மக்கள் சிறிய அளவிலான சுப நிழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. சாலை வசதி இல்லாத தெருக்கள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு கிராமத்துக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இவற்றை செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு பொரசப்பட்டு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்