கிராம மக்கள் சாலை மறியல்

வீடு மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-03-29 01:18 IST

வீடு மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்வலத்தில் மோதல்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம், குமரக்குடி கிராமம் குடித்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 26-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, அதே பகுதியில் கீழத் தெருவை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது ஊர்வலமாகச் சென்றவர்களுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று கீழத்தெருவை சேர்ந்த சிலர் குடித்தெருவில் வசிக்கும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி அங்குள்ள வீட்டை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடித்தெரு மக்கள் நேற்று மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

மேலும் வீட்டை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வீட்டை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்