கிராம மக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசாரை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசாரை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர் மீது தாக்குதல்
ராமநாதபுரம் அருகே உள்ள முனியன்வலசை கிராமத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் அருகில் உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியின் தரப்பினர் சிலர் நேற்று முன்தினம் முனியன்வலசைக்கு சென்று மாணவரை தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து மாணவரின் தரப்பினர் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முனியன்வலசை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை திரண்டு வந்தனர். இவர்கள் தங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். போலீசாரை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கலெக்டர்அலுவலக நுழைவுவாயில் பகுதியில் போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.