அரசு பஸ் இயக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

திட்டக்குடி-சாத்தநத்தம் இடையே அரசு பஸ் இயக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-14 19:53 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடியில் இருந்து கோடங்குடி வழியாக வையங்குடி வரை அரசு பஸ் ஒன்று தினந்தோறும் காலை மற்றும் மாலை என 2 முறை இயக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ்சை சாத்தநத்தம் கிராமம் வரை நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையறிந்த கோடங்குடி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று அங்குள்ள மெயின் ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், அரசு பஸ்சை சாத்தநத்தம் கிராமம் வரை நீட்டிப்பு செய்தால், எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர முடியாத நிலை ஏற்படும். மேலும் கூட்ட நெரிசலும் ஏற்படும். இதை தவிர்க்க அரசு பஸ்சை சாத்தநத்தம் கிராமம் வரை நீட்டிப்பு செய்யக்கூடாது என கூறி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் உரிய நேரத்தில் சென்று வர மாற்று ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

அதனை ஏற்று கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்