வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2023-06-10 18:45 GMT

களப்பால் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

திருவாரூர் மாவட்டம் களப்பால் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா கிடைக்காமலும், அரசு வீடு கிடைக்காமலும் இருந்து வருகின்றனர். வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் களப்பால் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா பாஸ்கரன் தலைமையில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நாராயணபுரம் களப்பால் கிராமத்தில் வீட்டில் உள்ள பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சாலையின் முன்பு வைத்தும், அடுப்பு சமையல் செய்தும் கோஷமிட்டனர்.

2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, முத்துப்பேட்டை மண்டல துணை தாசில்தார் மைதிலி, பாலையூர் வருவாய் ஆய்வாளர் சுதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அதில் இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு மாத காலத்திற்குள் அரசு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்