ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

நிலக்கோட்டை அருகே 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-13 19:30 GMT

நிலக்கோட்டை அருகே நக்கலூத்து ஊராட்சியில் அக்ரஹாரப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை வழக்கம் போல 100 நாள் வேலைக்கு சென்றனர். அப்போது பணித்தள பொறுப்பாளர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கணக்குகளில் பெயர் இல்லை எனக்கூறி கிராம மக்கள் சிலருக்கு வேலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், வேன் மூலம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய சந்திரிகா, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 100 நாள் வேலை சம்பந்தமாக எந்தவிதமான கணக்கும் எடுக்கப்படவில்லை என்றும், திடீரென வேலையை விட்டு நிறுத்தியது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டம் காரணமாக நிலக்கோட்டையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்