அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

மணப்பாறை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-28 19:31 GMT

மணப்பாறை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

மணப்பாறையை அடுத்த கே. பெரியபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 138 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 1995 - ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. மேலும் பள்ளிக்காக கிராம மக்கள் சார்பில் இடம் வாங்கி உள்ளதுடன் பள்ளியை தரம் உயர்த்தினால் அதற்கான அனைத்து தளவாட பொருட்களும் கிராம மக்கள் சார்பில் வழங்கி விடுகிறோம் என்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை சீனியாரிட்டியில் தான் உள்ளது என்று கூறி காலம் கடத்தி வருவதாக தெரிகிறது.

உண்ணாவிரதம்

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி அருகே நேற்று காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் தாசில்தார் தனலெட்சுமி, உதவி தொடக்ககல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார். இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்