வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர் அருகே பூதிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன்மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குடிநீர் உப்பாக இருப்பதால், தனியார் குடிநீர் விற்பனை செய்பவர்களிடம் ஒரு குடம் குடிநீரை ரூ.15 கொடுத்து கிராம மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த 2001-ம் ஆண்டு குரும்பபட்டியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதில் காவிரி குடிநீரை நீரேற்றம் செய்து, அதன்பிறகு கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் காவிரி குடிநீர் வினியோகமும் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை குரும்பபட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மு.கணேசன் தலைமையில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, குரும்பபட்டியில் காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில், வேடசந்தூர் ஒன்றிய பா.ம.க. தலைவர் ஈஸ்வரன், விவசாய அணி செயலாளர் பஞ்சவர்ணம், மகளிர் அணி செயலாளர் பாக்கியலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.