நாமக்கல்லில் கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாடு
நாமக்கல்லில் கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயா, செயலாளர் சாந்தாமணி, பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் கற்பகம் வரவேற்றார்.
இதில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், துணை மையத்திற்கு இலவச குடியிருப்பு மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பில் இருந்த கிராம சுகாதார செவிலியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமலர், மாநில பொதுச்செயலாளர் உஷாராணி ஆகியோர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் நாமக்கல் தாய், சேய் நல அலுவலர் தேவி, மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார செவிலியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் கமலம் நன்றி கூறினார்.