கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 9 இடங்களில் 2, 824 பேர் எழுதினர். நாமக்கல்லில் உள்ள மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நேற்று 9 இடங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி கொல்லிமலை தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்திலும், நாமக்கல் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த நபர்களுக்கு ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியிலும், மோகனூர் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு எஸ்.ஆர்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு கந்தசாமி கண்டர் கல்லூரியிலும், குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியிலும் தேர்வு நடத்தப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த தேர்வை எழுத மொத்தம் 3,762 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 938 பேர் தேர்வுக்கு வரவில்லை. எனவே 2,824 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தேர்வு மையத்திற்குள் அனுமதி சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் அனுமதிக்கவில்லை. தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11 மணிக்கு முடிவடைந்தது.