விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர்.

Update: 2024-06-15 00:00 GMT

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததால், அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள்இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் சேர்ந்து மொத்தம் 5 பேர் மட்டுமே தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும், மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அதன் அருகில் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்வதை தடுக்க, அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர்.

இதனால் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், களை கட்டியதோடு பரபரப்பாகவும் இயங்கியது.

நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 5 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரான சந்திரசேகரிடம் தாக்கல் செய்தனர்.

அப்போது யார் முதலில் மனுவை தாக்கல் செய்வது என அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்துவைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

திருச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரான ராஜேந்திரன் என்பவர் ஏ.டி.எம். கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் கார்டுகளை கழுத்தில் மாலையாக அணிந்தவாறு வந்து நூதன முறையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர், 'எல்லாம் டிஜிட்டல் மயம் என்கிறார்கள். டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தை டெபிட் கார்டு மூலம் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தேர்தல் அலுவலரிடம் கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் டெபாசிட் தொகை செலுத்தாமல் வெறும் வேட்பு மனுவை மட்டும் கொடுத்துவிட்டு ராஜேந்திரன் சென்றார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர், வார்டு தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என தற்போது 242-வது முறையாக நேற்று விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

241 முறை தேர்தல்களில் போட்டியிட்டு இதுவரை வெற்றி பெற்றதில்லை என்றும், தோல்வி அடைவதுதான் மகிழ்ச்சி என்றும், கின்னஸ் சாதனை படைக்கவே இதுபோன்று அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் மகாத்மா காந்தியைப்போல் கதர் ஆடை அணிந்தபடி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவரிடம் டெபாசிட் தொகையை செலுத்தும்படி தேர்தல் அதிகாரி கேட்டபோது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துக்கொள்ளும்படி கூறினார். அதற்கு நேரடியாகத்தான் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும் என்றும், இம்மாதிரியான வசதிகள் கிடையாது எனவும் தேர்தல் அலுவலர் கூறினார். அதற்கு, வேட்புமனு பரிசீலனையின்போது தாங்கள் கேட்கின்ற ஆவணங்கள், டெபாசிட் தொகை ஆகியவற்றை செலுத்துவதாக ரமேஷ் கூறினார். அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர், அம்மனுவை பெற்றுக்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த அக்னி ஆழ்வார் யாருமே எதிர்பாராத வகையில் தன்னுடைய கழுத்தில் 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்தவாறு வித்தியாசமான முறையில் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 20 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நோட்டுகளை மாலையாக அணிந்திருந்தார். மேலும் தனது வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரம் ரூபாயை முழுவதும் சில்லரை நாணயங்களாகவும், தேர்தல் அலுவலரிடம் அளித்தார். இந்த சில்லரை நாணயங்களை 10 பேர் கொண்ட அரசு ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக எண்ணினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்