முதல் மாநாடு - சேலம் 'சென்டிமென்ட்' விஜய்க்கு கைகொடுக்குமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை எங்கு நடத்துவது? என்பது குறித்து அக்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-07-28 04:38 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இந்த மாநாட்டை எங்கு நடத்துவது? என்பது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் அமைந்துள்ள திடலில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடத்தலாமா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அவ்விடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றார்.

இதனால் சேலத்தில் மாநாடு நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இங்குதான் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

இதேபோன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இதே திடலில் மாநாடு நடத்திய பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். மேலும், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி இதே நாழிக்கல்பட்டி பகுதியில் உள்ள திடலில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கியதால் 3-வது முறையாக தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

எனவே, அரசியல் கட்சியினர் வெற்றி மேல் வெற்றி பெற 'சென்டிமென்டாக' விளங்கும் சேலத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினால் அவர் அரசியலில் ஒளிர, சாதனை படைக்க கைகொடுக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்