தமிழகம் முழுவதும் 5-ந்தேதி முதல் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் - கட்சியினருக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் 5-ந்தேதி முதல் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என கட்சியினரை விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோடைகாலம் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைக்காலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும்.
ஆண்டுதோறும் நம்முடைய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது வழக்கம்.
அதேபோல் வரும் 5-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.