வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் கைதிகள் உறவினர்களிடம் பேசுவதற்கு வீடியோ கால் வசதி
வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் கைதிகள் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசுவதற்கான வீடியோ கால் வசதியை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் கைதிகள் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசுவதற்கான வீடியோ கால் வசதியை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார்.
மத்திய பெண்கள் ஜெயில்
தமிழகத்தில் உள்ள ஜெயில் கைதிகள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீலுடன் பேசுவதற்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். அதன்படி, சென்னையை அடுத்த புழல் பெண்கள் ஜெயிலில் நேற்று முன்தினம் கைதிகள் உறவினர்களுடன் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். புழல் பெண்கள் ஜெயிலை தொடர்ந்து மற்ற பெண்கள் ஜெயிலிலும் வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் ஜெயிலில் வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், மத்திய ஆண்கள் ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், பெண்கள் ஜெயிலர் நீலமணி ஆகியோர் கலந்துகொண்டனர். முதற்கட்டமாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள 'வாட்ஸ் அப்' செயலி மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீலுடன் வீடியோ காலில் பேசினார்கள்.
வீடியோ கால் வசதி
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் பெண்கள் ஜெயிலில் சுமார் 100 கைதிகள் உள்ளனர். கைதிகள் தங்கள் உறவினர்களுடன் தெளிவாக பேசுவதற்கு வசதியாக ஏற்கனவே இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெண்கள் ஜெயிலில் கைதிகள் உறவினர்களுடன் பேசுவதற்காக வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை என்று மாதம் 10 முறை கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீலை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசலாம்.
ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் வரை பேச அனுமதி அளிக்கப்படும். தொலைதூரத்தில் உள்ள கைதிகளின் உறவினர்கள், குடும்பத்தினர் ஜெயிலுக்கு நேரடியாக வந்து சந்திந்து பேச முடியாததால் இந்த வசதி அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் கைதிகளுக்கும் மன அழுத்தம் குறையும். விரைவில் மத்திய ஆண்கள் ஜெயிலும் வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்றனர்.