கிரேன் மற்றும் லாரியை வாடகைக்கு எடுத்து துணிகரம்: தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு - 5 பேர் கைது

எல்லாபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் இரும்பு பொருட்களை திருடி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-09 09:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜனவரி மாதம் 23-ந் தேதி சுமார் 30 டன் எடை கொண்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான இரும்புக் கம்பிகளை கிரேன் மற்றும் லாரி கொண்டு வந்து மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சென்னை மாத்தூரைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 45) என்பவரை கிளாம்பாக்கம் அரசு மதுபான கடை அருகே பெரியபாளையம் போலீசார் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் செங்குன்றம் ஆட்டதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரவி (38), அவரது சகோதரர் பழனி (31), செங்குன்றத்தைச் சேர்ந்த நாசர் (27), தென்காசியை சேர்ந்த மாயாண்டி (44) ஆகியோருடன் சேர்ந்து மேற்கண்ட தனியார் கம்பெனியில் சுமார் 30 டன் இரும்பு கம்பிகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்த திருட்டுச் செயலுக்கு மணலியில் இருந்து லாரி மற்றும் கிரேன் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து வந்து திருடியதை விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் இரும்பு கம்பி, லாரி, கிரேன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், குற்றவாளிகள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் 5 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ எடை கொண்ட துத்தநாகம் என்கிற உலோக கட்டிகள் திடீரென மாயமமானது. இவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். தெழிற்சாலையில் பாதுகாப்பிற்கு 3 பாதுகாவலர்கள் உள்ள நிலையில் துத்தநாகம் திருட்டு போய் இருப்பது நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்