நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்
நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 'நடவடிக்கையில் இறங்கு' திட்டத்தின் கீழ் சென்னை கிருஷ்ணாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தூய்மை பணியை ஆய்வு செய்தார்.
பின்னர் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில், சாலையோர கடைகள் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகள், கட்டிட கழிவுகள் மற்றும் நீண்டநாட்களாக பயன்பாடு இன்றி கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றி அந்த பகுதியை தூய்மையாக வைத்திடுமாறு பொதுமக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் கமிஷனர் அறிவுறுத்தினார்.
பின்னர் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 358 மாடுகள் பிடிக்கப்பட்டாலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் அதிகமாக காணப்படுகிறது. வருங்காலத்தில் இதற்கான அபராத தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று, 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இன்றி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஆயிரத்து 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் இத்தகைய வாகனங்கள் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 'நடவடிக்கையில் இறங்கு' திட்டத்தின் மூலம் மயானங்களை சுத்தப்படுத்தும் பணியானது கிருஷ்ணாம்பேட்டை உள்ளிட்ட 17 மயானங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 42 மயானங்கள் உள்ளன. அனைத்து மயானங்களும் சுத்தம் செய்யப்படும் பணிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.