சிவகாசியில் காய்கறி விலை உயர்வு

சிவகாசியில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

Update: 2023-07-02 20:46 GMT

சிவகாசி,

சிவகாசியில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

தக்காளி தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி வேண்டுராயபுரம் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது,:-

சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சில காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும். மற்றப்படி 80 சதவீத காய்கறிகள் மதுரை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் இருந்து தான் சிவகாசிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பாகற்காய் வரத்து குறைவு

ஆந்திராவில் இருந்து வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்ததால் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதேபோல் உள்ளூரில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் பாகற்காய் வரத்து குறைந்துவிட்டது. இதனால் இதன் விலையும் உயர்ந்துள்ளது.

மேலும் போதிய விவசாய வேலை ஆட்கள் இல்லாத நிலையில் வெண்டை, கீரை வகைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் உடலுக்கு நன்மை தரும் பல காய்கறிகள் மற்றும் கீரைகள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை விவரம்

சிவகாசி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் (1 கிலோ) வருமாறு:-

தக்காளி- ரூ.120, சின்ன வெங்காயம்-ரூ.100, பெரிய வெங்காயம்- ரூ.30, கத்தரிக்காய்-ரூ.55, மிளகாய்-ரூ.150, வெண்டைக்காய்-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, கேரட்-ரூ.60, பாவக்காய்-ரூ.200, முருங்கைக்காய்-ரூ.50, காளிபிளவர்-ரூ.40, மல்லி-ரூ.120, கொய்யாபழம்-ரூ.30, மாம்பழம்-ரூ.40.

Tags:    

மேலும் செய்திகள்