காலிபிளவர் சாகுபடி தீவிரம்

தளி பகுதியில் காலிபிளவர் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-31 18:00 GMT

தளி பகுதியில் காலிபிளவர் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

காலிபிளவர் சாகுபடி

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மழைநீரையும், அணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவற்றில் ஏற்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றுப்பாசன முறையில் சில விவசாயிகள் காலிபிளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றையும் புடலை, பாகல், பீர்க்கன், அவரை, அரசாணி, வெள்ளரி, பூசணி போன்ற கொடி வகை தாவரங்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளி பகுதியில் காலிபிளவர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

அறுவடை பணி

பல்வேறு மருத்துவ குணங்களையும் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்களையும், மூளை போன்ற தோற்றம் அளிக்கும் காலிபிளவர் சாகுபடியை பனிக்காலத்தில் மேற்கொண்டால் கூடுதல் விளைச்சலை அளிக்கும். கார்த்திகை மாதத்தில் சாகுபடி செய்து தை மாதத்தில் கூடுதல் விளைச்சலை வழக்கமாகக்கொண்டு உள்ளோம். சில்லி, பொரியல், குழம்பு என அன்றாட உணவில் காலிபிளவரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பூக்கோசு என்று அழைக்கப்படும் காலிபிளவர் புற்றுநோய் தடுப்பு, இதயத்தை பாதுகாத்தல், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைத்தல், உடல் எடையை குறைத்தல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குதல் என உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து வருகிறது.

சாகுபடி செய்யப்பட்ட காலிபிளவர் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. அதை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றோம். ஆனால் கடந்த சில காலமாக காலிபிளவருக்கு ஓரளவுக்கு விலை கிடைத்து வருகிறது. இதனால் செடிகள் பராமரிப்பு, அறுவடை பணியில் முனைப்பு காட்டி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்