வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் 'இடப்பங்கீடு எமது உரிமை' விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.
திரேஸ்புரம் ஊர் தலைவர் சந்தன செல்வம் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், செயலாளர் அழகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு, மணிகண்டன், முத்துராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், அரசு ஆணைபடி 'வலையர் புனரமைப்பு' வாரியத்தை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசால் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க வேண்டும். திரேஸ்புரம், மாதவநாயர் காலனியில் அமைந்துள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை உடனே திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முத்தரையர் மக்களையும் மீனவர் இட ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழர் தேசம் கட்சி மாநிலச் செயலாளர் அழகர், மாநில இளைஞரணி அமைப்பாளர் குணா, மாணவரணி ஒருங்கிணைப்பாளர் நத்தம் பூமிநாதன், மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மேட்டுப்பட்டி ஊர் தலைவர் அழகு, விவேகானந்தர் நகர் ஊர் தலைவர் பிரபு, முத்தரையர் நகர் ஊர் தலைவர் கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.