கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் - தொல்.திருமாவளவன் பேச்சு

ஆபத்தில் இருந்து தேசத்தை காக்கும் கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.

Update: 2023-03-30 06:58 GMT

கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து ஜனநாயகத்தை ஒழித்து கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக கூறி மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், மாநில துணைத் தலைவர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பழ ஆசைத்தம்பி, திராவிடர் தேசம் கட்சியின் தலைவர் கிருஷ்ணா ராவ் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் கண்டன உரை ஆற்றினர்.

மோடிக்கு எதிராக கோஷம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைசெல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, வி.சி.க. முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், பாவரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. மாவட்ட செயலாளர்கள் ரா.செல்வம், வி.கோ.ஆதவன், நா.செல்லத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

ராகுல்காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகள், அவரது எம்.பி. பதவி பறிப்பு போன்றவை பா.ஜ.க.விற்கும், காங்கிரசுக்குமான போராட்டம் இல்லை. மோடிக்கும், ராகுல்காந்திக்குமான போராட்டம் இல்லை. அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. தேர்தலுக்கான போராட்டம் இல்லை. மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தேசத்தை காக்க வேண்டிய ஒரு கருத்தியல் போர். இந்த போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை, விடுதலை சிறுத்தைகள் உற்றத் துணையாக இருப்போம்.

அதானியின் கொள்ளையை...

ராகுல்காந்தி பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அவரின் பேச்சு மோடியை மிரள வைக்கிறது. மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அதானியை அழைத்து செல்கிறார், எதற்காக அழைத்து செல்கிறார்? அவர் என்ன பா.ஜ.க. நிர்வாகியா? மோடியுடன் அதானி வெளிநாடு செல்லாத சமயங்களில் அடுத்த சில நாட்களில் அந்த நாடுகளுக்கு அதானி தனியாக எதற்காக செல்கிறார்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் சொன்னால், அது பதிவாகி விடும். எனவே, நாடாளுமன்றத்தை ஆளும் கட்சியினரே முடக்குகின்றனர். அதானியின் முகம் என்பது மோடி அணிந்துள்ள முகமூடியாகும். அவரின் முகமூடி கிழிந்துவிடும் என்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். எனவே, ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அதானியின் கொள்ளையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

எனவே, தோழமை கட்சிகளை அழைத்து தொடங்கி இருக்கும் இந்த அறப்போராட்டம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும். அந்த வகையில், ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில், 'ஜனநாயகம் காப்போம்; சிறுத்தைகள் அணிவகுப்போம்' என்ற பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாம் தொடங்கும் இந்த பேரணி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி கனவு நினைவாகிற வகையில், சனாதான சக்திகளை விரட்டியடிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்