குழித்துறையில் 20 நாட்கள் நடைபெற உள்ள வாவுபலி பொருட்காட்சி ரூ.1 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம்
குழித்துறையில் 20 நாட்கள் நடைபெற உள்ள வாவுபலி பொருட்காட்சி ரூ.1 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
குழித்துறை,
குழித்துறை நகராட்சி சார்பில் 97-வது வாவுபலி பொருட்காட்சி ரூ.1 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் போனது.
வாவுபலி பொருட்காட்சி
குழித்துறை நகராட்சி சார்பில் கடந்த 96 வருடங்களாக வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் நடத்தப்பட்டு வரும் இந்த பொருட்காட்சியில் விவசாய விளைபொருள் கைவினை கண்காட்சி, அரசு சாதனை விளக்க கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட பல்வேறு காட்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இந்த பாகுபலி பொருட்காட்சி கடந்த பல வருடங்களாக தனியாருக்கு குத்தகை ஏலத்தில் விடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.1 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம்
இந்த வருடம் 97-வது வாவுபலி பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சியை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதி முதல் ஆகஸ்டு 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடத்த குழித்துறை நகராட்சி தீர்மானித்துள்ளது. மேலும் தனியாரிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட டெண்டர் கோரப்பட்டது.
குழித்துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் முன்னிலையில் நேற்று டெண்டர்கள் பிரிக்கப்பட்டன. அதில் குழித்துறையை சேர்ந்த பால்ராஜ் ரூ.1 கோடியே 21 லட்சத்திற்கும், தேனியை சேர்ந்த சுரேஷ் ரூ.1 கோடியே 17 லட்சத்திற்கும், தங்கதுரை ரூ.1 கோடியே 16 லட்சத்திற்கும் ஏலம் கேட்டிருந்தனர்.
அதை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் பால்ராஜ் கொடுத்திருந்த தொகை அதிகமாக இருந்ததால் அவருக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்திற்கு பொருட்காட்சி நுழைவு கட்டணம் மற்றும் பக்கக்காட்சிகள் அனைத்துமாக கொடுக்க உறுதி செய்யப்பட்டது. இது கடந்த முறையை விட ரூ.6 லட்சம் அதிகமாகும். மேலும் கொரோனா தோற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.