மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; இளநீர் வியாபாரி பலி

கயத்தாறு அருகே வேன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளநீர் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

Update: 2023-06-30 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே வேன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளநீர் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

இளநீர் வியாபாரி

தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலு மகன் சுப்பிரமணி (வயது 55). வியாபாரி. கயத்தாறில் மெயின் ரோட்டில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும், சுமதி என்ற மகளும், வேல்சாமி என்ற மகனும் உள்ளனர்.

சுப்பிரமணி தற்போது கயத்தாறு அருகே உள்ள பாரதிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் தனது சொந்த ஊரான கண்ணாடிகுளம் கிராமத்தில் இறந்த உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

வேன் மோதியது

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அவர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தேவர்குளம்-கயத்தாறு சாலையில் அய்யனார் ஊத்து அருகே சென்றபோது, எதிரே ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்காசி மாவட்டம் ஊத்துமலைக்கு வேன் வந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுப்பிரமணி உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்