வால்பாறை அட்டகட்டியில் ஒருங்கிைணந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை திறக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை அட்டகட்டியில் ஒருங்கிைணந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2022-07-01 14:32 GMT

வால்பாறை

வால்பாறை அட்டகட்டியில் ஒருங்கிைணந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கொரோனா தடுப்பு சோதனை சாவடி

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க வால்பாறைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய கடந்த 2020-ம் ஆண்டு வால்பாறை- பொள்ளாச்சி செல்லும் சாலையில் அட்டகட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டது.அங்கு காய்ச்சல், சளி இருமல் உள்ளதா, தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை சுகாதார பணியாளர்கள், காடம்பாறை போலீசார், அரசு ஆரம்ப சுகாதாரதுறை, வருவாய் துறையினர் இணைந்து பணிபுரிந்து வந்தனர்.

செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

இந்த ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் பணியாளர்கள் தங்கும் வசதி, கண்காணிப்பு கேமரா, கொரோனா தடுப்பு சோதனை கருவிகள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து இந்த ஒருங்கிணைந்த கொரோனா சோதனை சாவடி மூடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், வால்பாறை பகுதியில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையிலும் மீண்டும் இந்த ஒருங்கிணைந்த கொரோனா சோதனை சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வால்பாறை பகுதிக்கு வரும் அனைவரையும் உரிய பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேலும் இந்த சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தனியார் வாகனங்களில் வரக்கூடிய அனைவரையும் குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரையும் உரிய சோதனைக்கு பின்னர் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்த அனைத்து விழிப்புணர்வையும் இந்த சோதனை சாவடி மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் வால்பாறை பகுதி மக்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்