பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு- தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Update: 2024-03-01 08:57 GMT

சென்னை,

ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

,

Tags:    

மேலும் செய்திகள்