முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

முருகன்கோவில்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

Update: 2022-06-12 20:39 GMT

மதுரை,

முருகன்கோவில்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

சோலைமலை முருகன் கோவில்

முருகப்பெருமானின் ஆறாவது படை வீடானது சோலைமலை முருகன் கோவிலாகும். இந்த கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் கடந்த 3-ந் தேதி காலையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இந்த கோவிலின் சஷ்டி மண்டப சன்னதியில் வள்ளி, தெய்வானை, சமேத சண்முகருக்கு சண்முகார்ச்சனைகள் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மாலையில் பால், பழம், பன்னீர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மகா அபிஷேகம் நடந்தது. அப்போது தாமரை வண்ணப் பூ மாலைகள் அணிந்த அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பத்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இதைப் போலவே, தொடர்ந்து மொத்தம் 10 நாட்கள் இந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. முன்னதாக இதில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர் சுவாமி, வித்தகவிநாயகர், வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மேலும் உற்சவர் சுவாமிக்கு குடம் குடமாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பாலாபிஷேகமும் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர் செய்து இருந்தனர்.

ேநதாஜி ரோடு முருகன் கோவில்

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவில் நேற்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தின் முன்னிட்டு முருகனுக்கு பால் உள்ளிட்ட 12 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இரவு சாமி வீதி உலா நடந்தது.இதே போல் தென்கரையில் அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர்சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி முருகனுக்கு 12 அபிஷேகங்கள் நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இரும்பாடி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதே போல மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், மற்றும் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்திகோஷத்துடன் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்