கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா...!

கன்னியாகுமரி பகவதி அம்மன கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால் நாட்டு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.;

Update:2022-05-27 12:50 IST


உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக 2-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 'மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான' நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

இதுதவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள்,அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு, பாட்டுக்கச்சேரி, நாதஸ்வரகச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.

அன்றுகாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று காலை 8-30 மணிக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்