வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு

வனத்தறை சார்பில் அனுமதி வழங்கப்படாததால் 25 நாட்களாக மூடப்பட்டு இருந்த வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

Update: 2023-03-12 10:56 GMT

பாம்பு பண்ணை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வையாளர்கள் முன்பு கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கப்படுகிறது. இந்த பாம்பு பண்ணையில் 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து வழங்கி வருகின்றனர். இந்த பாம்பு பண்ணைக்கு கொண்டு வரப்படும் பாம்புகள் மண் பானைகளில் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள மருந்து ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். பாம்பு விஷத்தில் இருந்து பாம்பு விஷ முறிவு மருந்தும், புற்றுநோய்களுக்கான மருந்தும் தயாரிக்கப்படுகிறது.

அனுமதி வழங்கப்படாததால்...

இந்த நிலையில் விஷ பாம்புகளை பிடிக்க இந்த பாம்பு பண்ணைக்கு 6 மாத்திற்கு ஒரு முறை வனத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டு, அனுமதி கடிதம் (லைசென்ஸ்) வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாததால் இந்த பாம்பு பண்ணை கடந்த 25 நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. தற்போது வனத்துறையின் அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டதால் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாம்பு பண்ணை திறக்கப்பட்டது.

தற்போது இதில் உறுப்பினர்களாக உள்ள பழங்குடி இருளர்கள் பாம்புகளை தேடி வயல் வெளிகள், புதர்கள், செடி, கொடிகள் படர்ந்துள்ள இடங்களுக்கு சென்று விஷ பாம்புகள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு

தற்போது முதல் கட்டமாக நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய வகைகளை சேர்ந்த 97 பாம்புகள் ஒரே நாளில் பிடித்து வரப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களுக்குள் 700 முதல் 1000 பாம்புகள் வரை பாம்பு பண்ணைக்கு வர இருப்பதாகவும், அவை மண் பானைகளில் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் முன்பு விஷம் எடுக்கும் காட்சிகள் நடத்தப்படும் என்றும் பாம்பு பண்ணை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது விஷ பாம்புகள் கடித்தால் என்னமாதிரியான மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும், வீட்டிற்குள் பாம்புகள் புகுந்தால் பயமின்றி பாதுகாப்பு கருவி துணையுடன் அதனை எப்படி பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறித்து நேரிடையாக பாம்புகளை காட்டி பழங்குடி இருளர்கள் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதிகளவில் விஷ பாம்புகள் வந்த பிறகே விஷம் எடுக்கும் காட்சிகள் நடத்தப்படும், அதுவரை விஷ பாம்புகள் காட்சி படுத்தப்பட்டு விழிப்புணர்வு, சந்தேகங்கள் குறித்து விளக்கி கூறப்படும் என்றும் பாம்பு பண்ணை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்