'குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும்' - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-10-13 06:00 GMT

சென்னை,

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-3, குரூப்-4 என பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், குரூப்-4ன்கீழ் (Group IV) உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், முதன் முறையாக 2022 ஆம் ஆண்டு குரூப்-4ன்கீழ் வரும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன்மூலம், சீருடைப் பணியாளர்கள் (வனத்துறை) இல்லாமல் 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2023 ஆம் ஆண்டு குரூப்-4 போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு, குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் குரூப்-4ன்கீழ் கிட்டத்தட்ட 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2024 ஆம் ஆண்டு முதலில் வெறும் 6,244 பணியிடங்களுக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டது.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெகு குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, cut-off மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஏழை எளிய கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிடும் என்றும், 2024-ஆம் ஆண்டு தொகுதி-4 போட்டித் தேர்வினை எழுதியோர் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, பல தகுதியான இளைஞர்கள் தேர்ச்சி பெறமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 34 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க.வின் வாக்குறுதியில் பத்து விழுக்காடு கூட நிறைவேற்றப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது.

குரூப்-4ன்கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்