மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-;
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நிதியுதவிகளுடன் சுமார் 1,055 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழையானது அடுத்த 2 மாத காலத்தில் தொடங்க உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தார்.
அதனடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக்கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.
அதில் சென்னையின் பிரதான பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகள் நடைபெறும் பொது ஒப்பந்ததாரர்களுக்கு பிற சேவைத்துறைகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு பெற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று திரு.வி.க.நகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால்களில் நீர் உட்புகும் வண்டல் வடிகட்டி தொட்டிகள் உரிய அளவுகளின்படி உள்ளதா? என்பதையும், காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும் காந்தி கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் இணையும் இடத்தில் கால்வாயில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் எம்.எஸ்.பிரசாந்த், மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான், வடக்கு வட்டார துணை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.