வரலாறு காணாத கனமழை: "போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்" - தலைமை செயலாளர் தகவல்

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-18 16:58 GMT

சென்னை,

தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. வெள்ளத்தால் பேருந்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் உள்பட பல ஊர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விமானப்படை மூலம் 1,000 கிலோ உணவு விநியோகம் செய்துள்ளோம். மொத்தமாக 106 நிவாரண முகாம்கள் திறப்பு 905 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 200 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, 40 தீயணைப்பு படகுகள் மீட்பு பணியில் உள்ளன. நாளை காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். அனைத்து அரசு அதிகாரிகளும் களத்தில் இருக்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்களில் சில பேரும், அருகில் உள்ள மண்டபத்தில் சில பேரும் தங்க வைக்கபட்டுள்ளார்கள். ஹெலிகாப்டரில் உணவு அளிக்க சென்ற போது பனி மூட்டம் இருந்ததால் அவர்களுக்கு சரியான முறையில் உணவு அளிக்க முடியவில்லை

விமான நிலையங்கள் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. சென்னையில் இருந்து 100 பம்புகள் அனுப்பி வைத்து உள்ளோம். 18 லாரிகளில் உணவு பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது நாளை காலை மக்களுக்கு வழங்கப்படும்" என்று சிவ்தாஸ் மீனா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்