மத்திய அரசை கண்டித்து கடலூரில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டர் பேரணி
மத்திய அரசை கண்டித்து கடலூரில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டர் பேரணி நடத்தினர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளான வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். புதிய மின்சார மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போராடிய இந்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு களை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
டிராக்டர் பேரணி
அதன்படி நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அங்கிருந்து டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி தொடங்கியது. இந்த பேரணி கடலூர் அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக சென்று மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் முடிவடைந்தது. தொடர்ந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய இணை செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் ராஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், குடியிருப்போர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.