இரண்டொரு நாட்களில் காவிரி நீர் வழங்க உத்தரவிடுவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உறுதி - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
இரண்டொரு நாட்களில் காவிரி நீர் வழங்க உத்தரவிடுவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி இரண்டொரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை கொடுத்து விட்டு நிலைமைகளை விளக்கினேன். அவரும் நிலைமைகளை உணர்ந்து கொண்டு இரண்டொரு நாட்களுக்குள்ளாக மேலாண்மை ஆணைய அதிகாரிகளை கூப்பிட்டு இருக்கின்ற தண்ணீரை எப்படி பங்கிட்டு வழங்க வேண்டுமோ அதை விரைவில் வழங்க உத்தரவிடுகிறேன் என்று என்னிடத்தில் தெரிவித்தார்.
எனவே அந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு பலன் கொடுக்குமானால் தஞ்சையில் பயிர்கள் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.