கல்வித்துறை சீரழிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது பிரதமர் மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2024-09-12 11:03 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

'பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்" என்று சுருக்கமாக அழைக்கப்படும் "பி.எம். ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா" பள்ளிகள் திட்டத்தை மோடி அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையும் பள்ளிகளில், மத்திய பா.ஜ.க. அரசு கொண் டுவந்துள்ள, 'புதிய தேசிய கல்விக் கொள்கையை" கட்டாயம் நடைமுறைப்படுத்தியாக வேண்டும். மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும், இந்துத்துவ செயல் திட்டத்தை நிறைவேற்ற மறைமுகமாக உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும், தமிழக பா.ஜ.க. தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுத்தாலும், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தபடி, இந்த பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாறியுள்ளதா? அருகில் உள்ள பள்ளிகளை வழி நடத்தும் அளவுக்கு மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் விசாரித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை. அதுமட்டுமல்ல, அப்பள்ளிகள் ஏற்கனவே இருந்த நிலையை விட மோசமாகி இருக்கிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளில் கழிப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, புதிய, நவீன கற்பித்தல் முறைகள், அனைத்து வசதிகளுடன் நூலகம், ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். ஆனால் தலைநகர் சென்னையில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட ஏற்கனவே இருந்த இந்த வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எந்த ஒரு கல்வி நிலையத்திற்கும் தூணாக இருப்பது அதன் ஆசிரியர்கள் தான். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சிறப்பே அதன் ஆசிரியர்கள்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெறும், இடமாறுதல் பெறும் ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதில்லை. கணிதம், அறிவியல் போன்ற முக்கிய பாடங்களின் ஆசிரியர் பணியிடங்கள் கூட இரண்டு, மூன்று மாதங்கள் காலியாக இருக்கின்றன. பல பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கற்பித்தலில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது வேதனையை அளிக்கிறது.

சென்னை அண்ணா நகரில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாவது தளத்தில் கழிவறையின் கதவுகள் உடைந்து ஒன்றரை மாதங்கள் சரி செய்யப்படவில்லை. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இல்லாமல் இரண்டு மாதங்கள் அறிவியல் பாடம் நடத்தப்படவில்லை. இதனால் காலாண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளை திருத்தி மதிப்பெண்கள் கூட வழங்கப்படவில்லை.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கில வழிப் பள்ளிகள். இந்தி என்பது இரண்டாவது மொழிதான். ஆசிரியர்கள் சிலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிவதில்லை. இதனால், இந்தி மொழியிலேயே பாடம் நடத்துகிறார்கள். ஆங்கில வழிப்பள்ளியில் இந்தி மொழியில் பாடம் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. ஆனாலும், இந்த கொடுமை சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில், 'மும்மொழிக் கொள்கை' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் உள்நோக்கத்துடன் மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், இதை மறைப்பதற்காக இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயம் அல்ல. மூன்றாவது மொழியாக, எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மறைப்பதற்காக நான்காவது மொழியாக தமிழ் அல்லது வேறு மொழிகளை படிக்கலாம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த நான்காவது மொழி பாடத்திற்கு தேர்வு நடத்தப்படுவதில்லை. தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து வாரத்திற்கு ஒரு வகுப்பு நடத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது மொழி என்பதே மாணவர்களுக்கு சுமை என்று கல்வியாளர்கள் வாதிட்டு கொண்டிருக்கும் போது, நான்காவது மொழியை திணித்து மாணவர்களின் மேல் பெரும் சுமையை ஏற்றி கொண்டிருக்கிறது மோடி அரசு.

'பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த பிறகு உங்கள் பள்ளியில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?' என்று ஒரு மாணவரிடம் கேட்டபோது, முன்பு 'கேந்திரிய வித்யாலயா' என்று இருந்த பெயர் பலகை, இப்போது 'பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா' என்று மாறியிருக்கிறது. வேறு எந்த மாற்றமும் இல்லை என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார். மோடி ஆட்சியில் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு அவல நிலையில் உள்ளன என்பதற்கு இந்த மாணவரின் பதிலே சாட்சி. புதிய புதிய பெயர்களில் திட்டங்களை அறிவித்து, அத்திட்டத்தின் பெயர் ஸ்டிக்கராக ஒட்டி மகிழ்கிறதே தவிர, அந்த திட்டத்தை மோடி அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை.

பி.எம்.ஸ்ரீ கல்வித் திட்டத்தில் இணைந்தால் அரசுப் பள்ளிகள் அனைத்தும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்ந்து விடும் என்பது போன்ற மாயத் தோற்றத்தை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும், பா.ஜ.க. தலைவர்களும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மை என்பது அதற்கு நேர் மாறாக இருக்கிறது என்பதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படும் விதமே சான்றாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. அப்பள்ளிகளில் சேர கடும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது இப்பள்ளிகள் சீரழிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கல்வி மந்திரி துறையில் தோல்வியடைந்த தர்மேந்திர பிரதானை கல்வி மந்திரியாக மீண்டும் மோடி அரசு நியமித்துள்ளது. கடந்த ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும்போதே, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள், மோசடிகள் நடந்தன. அதை சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கண்டித்தது. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய தர்மேந்திர பிரதானை மீண்டும் கல்வி மந்திரியாக பிரதமர் மோடி நியமித்திருக்கிறார். நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது பிரதமர் மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது. எனவே இனியும் தாமதிக்காமல் மத்திய கல்வி மந்திரி பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் மாணவர் சமுதாயம் மோடி அரசை மன்னிக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்